சென்னையில் தமிழராய் இணைந்த ஒன்பதாம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு கோலாகலம்
*சென்னையில் தமிழராய் இணைந்த ஒன்பதாம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு கோலாகலம்*
சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 6 மற்றும் ஏழாம் தேதிகளில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெற்றது. அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தமிழ் சட்டமன்ற, பாராளுமன்ற, உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இலங்கையில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு சிவி விக்னேஸ்வரன் அவர்கள், தமிழர்கள் பொருளாதாரத்தில் எப்படி உயர வேண்டும் என கருத்து வைத்தார். மலேசியாவின் முதல் தமிழ் பெண் அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி , அவர்கள் தமிழ் வழிக் கல்வியும், அதனுடைய சிறப்பையும் அதன் தொன்மையும் விளக்கி கருத்துரைத்தார்.
மலேசிய சுங்கை சிப்போர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கேசவன் அவர்கள், தமிழர்கள் அரசியலில் ஈடுபட்டு அரசாங்க சலுகைகளை நம் தமிழர்களுக்கு பெற்றுத் தர அரசியல் ஓர் பேராயுதமாக இருக்கும் என கருத்துரைத்தார் . இலங்கையின் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் திரு. ராதாகிருஷ்ணன் எம்பி அவர்கள், உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் கடந்து வந்த பாதையும், அதன் நோக்கத்தையும் பற்றி கருத்துரைத்தார்.
மலேசிய நெகிரி மாநில துணை சபாநாயகர் டத்தோ ஸ்ரீ ரவி அவர்கள், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், பாதிப்புகளையும் சட்டமன்ற உறுப்பினர் திரு குணா அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என கருத்துரைத்தார். சட்டமன்ற உறுப்பினர் திரு குணா அவர்கள் உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பு மூலம் தமிழர்கள் அடைய வேண்டிய இலக்கை பற்றி கருத்துரைத்தார். இந்நிகழ்வில் இலங்கையின் வீரகேசரி தினசரி நாளிதழில் நிர்வாக இயக்குனர் திரு சிவக்குமார் நடேசன் அவர்களுக்கும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய முதல் விதை பணமாக வழங்கிய டாக்டர் ஜானகிராமன் அவர்களுக்கும், மலேசிய மெடிக்கல் அசோசியேஷன் பொதுச் செயலாளர் திரு நாவுக்கரசு அவர்களுக்கும் சாதனைத் தமிழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கனடாவின் திரு சுபாஷ் அவர்களுக்கு ‘தமிழ் சேவகன் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு சுமார் 40 ஆண்டுகளாக கல்வி கற்றுக் கொடுத்து வரும் கருஞ்சட்டை திரு ராஜேந்திரன் அவர்களுக்கு நல்லாசன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்வனைத்து நிகழ்வுகளிலும் முத்தாய்ப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு ‘தென்னாட்டு அண்ணல்’ என்ற பட்டத்தை இலங்கை முன்னாள் ராஜாங்க அமைச்சர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிக்க இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் முன்னிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் திரு சி வி விக்னேஸ்வரன் அவர்கள் தென்னாட்டு அண்ணல் என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளும், தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக ஆடை, அலங்கார நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் அயல்நாட்டு தூதர்கள், வர்த்தக ஆணையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ‘வளரும் தமிழகம்’ என்ற கண்காட்சியும் நடைபெற்றது. இவ்வனைத்து நிகழ்வையும் நெறியாளர் ஜான் தன்ராஜ் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் மற்றும் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.